இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டித்தரக்கோரி பொதுமக்கள் மறியல்


இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டித்தரக்கோரி பொதுமக்கள் மறியல்
x

கரூர் அருகே இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டித்தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

பயணிகள் நிழற்குடை இடிப்பு

கரூர் அருகே உள்ள வடக்கு பாளையத்தில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த பயணிகள் நிழற்குடை உள்ள பகுதியில் தனக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறி அந்த பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த நபரிடம் சென்று இதுகுறித்து முறையிட்டனர். அப்போது அவர் 15 நாட்களுக்குள் உரிய இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடையை அந்த நபர் கட்டித்தரவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் உடனடியாக புதிய நிழற்குடையை கட்டித்தரக்கோரி கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இடத்தை அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story