6-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
குப்பை கிடங்கும் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13-ந் தேதி முதல் புனல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கும் அமைக்கும் இடத்தின் அருகில் சாலையோரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 6-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு நூதனமான முறையில் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் சிலர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற இடத்தில் அருகில் உள்ள காஞ்சி சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.