பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
அரியலூரில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு சங்கங்கள்
கூட்டுறவு சங்கங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பாலில் உள்ளூர் விற்பனை 10 சதவீதம் மட்டுமே மேற்கொண்டு மீதமுள்ள பால் முழுவதையும் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மேற்காணும் சங்கத்தலைவர், செயலர், பணியாளர் மீது உடனுக்குடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி பால்வளத்துறை அமைச்சரின் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இதுகுறித்து அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், இடைக்காட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் செந்துறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
பால் தட்டுப்பாடு
இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் பால் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே பால் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சில்லறையில் வாங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள், பால் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். மேலும், டீக்கடை, ஓட்டல்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு நேற்று காலை 6 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள், இணைப்பதிவாளரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது, நாளை (இன்று) முதல் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியல்
இதே கோரிக்கையை வலியுறுத்தி பொய்யாதநல்லூர், கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலை ஸ்தம்பித்தது. இதனால் காலை நேரத்தில் பஸ்களில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி- கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் பரிதவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் பொய்யாதநல்லூர் கிராம மக்கள் பால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வந்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அதனை தொடர்ந்து பால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வந்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் கடுகூர், தவுத்தாய்குளம் போன்ற இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலெக்டரிடம் மனு
அரியலூரில் பால் விற்பனையில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம், அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள், செந்துறை, ஜெயங்கொண்டம், இளைக்கட்டு, தூத்தூர் உள்ளிட்ட அனைத்து கிராம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் சார்பில் செந்துறை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆலோசகர் கொளஞ்சிநாதன், கீழப்பழூவூர் பாஸ்கர், அரியலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் மணி உள்ளிட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சங்க உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் ஆகியோரின் நலனை நோக்கமாக கொண்டு அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க பால்வளத்துறை கடந்த 2-ந் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பால் விற்பனையில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.