திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போரட்டம்
பள்ளி மாணவன் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்த கோரி திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போரட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோரி பொதுமக்கள் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
பொதுமக்கள் போராட்டம்
திருச்செந்தூர், தோப்பூரைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் அஜய்குமார் (வயது 10). அங்குள்ள அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அஜய்குமார் கடந்த 2-ந்தேதி பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு பலத்த காங்களுடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதையடுத்து மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அது குறித்து உரிய சட்ட விசாரணை வேண்டுமென்றும், குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அதுவரையில் சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் தோப்பூர் பொதுமக்கள் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் சுமார் 5 மணி நேரம் போராட்டம் நடந்தது.
சமாதான பேச்சுவார்த்தை
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் புஹாரி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், ஆதி திராவிடர் நல அலுவலர் பரிமளா, தாசில்தார்கள் சுவாமிநாதன், செந்தூர்ராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் பாஸ்கரன், இம்மானுவேல், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், தோப்பூர் கிராம பிரமுகர்கள் மா.சு.மனோகரன், நாகலிங்கம், சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலர் ஆண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியரை பணி இடைநீக்கம் செய்யவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், மாணவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்வது, மாணவரின் மரணத்தில் உண்மை கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
முன்னதாக பள்ளி வளாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.