கோவிலை திறக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
குன்னம் அருகே கோவிலை திறக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ரெட்டி குடிக்காடு கிராமத்தில் ஆயுத அம்மன் என்கிற மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கோவிலில் அம்மனை வழிபட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் கோவில் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோவில் கதவில் இருதரப்பினரும் ஆளுக்கு ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டனர். இதனால் அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடைபெறாமலும், பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமலும் இருந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் குன்னம் போலீசில் புகார் அளித்தனர். இந்தநிலையில் அம்மன் கோவிலை திறக்கக்கோரி பொதுமக்கள் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.