டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள், கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
குடியாத்தம் நேதாஜிசவுக் பகுதியில் இருந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் செல்லும் பாதை வழி ஒருவழிப் பாதையாக உள்ளது. இந்த வழியில் சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டது. இந்த கடையால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும், மேலும் ஒரு வழி பாதை என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும், டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே அதிகாலை முதலே மது பாட்டில்கள் விற்பதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இருப்பினும் பல மாதங்கள் ஆகியும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.
பொதுமக்கள் போராட்டம்
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஏராளமான பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் லாவண்யாகுமரன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர்கள் எஸ்.ரமேஷ், எஸ்.குமார், மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார், ஒன்றியகுழு உறுப்பினர் சுரேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பாரத்நவீன், பா.ஜ.க. முன்னாள் நகர தலைவர் ராஜாசெல்வேந்திரன் உள்பட அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சீனிவாசன், யுவராஜ் உள்ளிட்டோர் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.