டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x

கிருஷ்ணராயபுரம் அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

டாஸ்மாக் கடை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், கூட்டுறவு வங்கி, சமுதாயக்கூடம், வாரச்சந்தை போன்றவை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கிவிட்டு மதுபிரியர்கள் சமுதாயக்கூடம் மற்றும் வாரச்சந்தை வளாகத்திற்குள் அமர்ந்து கொண்டு மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை ஆங்காங்கே உடைத்து போட்டு செல்கின்றனர்.

இந்த கடை பிரதான சாலையில் உள்ளதால் இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கடையால் மேலும் பல்வேறு பிரச்சினைகள் வருவதால் இந்த கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை இப்பகுதி பொதுமக்கள் புகார் மனு கொடுத்தும், பல்வேறு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பார் வசதி ஏற்படுத்துவதற்காக கொட்டகை அமைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து உடனடியாக டாஸ்மாக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் மற்றும் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், டாஸ்மாக் சில்லறை விற்பனை பிரிவு உதவி மேலாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வருகிற 12-ந்தேதிக்கு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும், மேலும் பார் அமைக்க போடப்பட்ட கொட்டகையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story