டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2022 8:00 PM GMT (Updated: 30 Sep 2022 8:01 PM GMT)

சங்ககிரி பேரூராட்சி 14-வது வார்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சங்ககிரி:-

சங்ககிரி பேரூராட்சி 14-வது வார்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை

சங்ககிரி பேரூராட்சி 14-வது வார்டு வசந்தம் காலனி, குண்டாச்சிக்காடு, அருந்ததியர் தெரு ஆகிய பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். வசந்தம் காலனி பஸ் நிறுத்தம் அருகே, ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி வரதங்காட்டானூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கடை இன்று (சனிக்கிழமை) திறக்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14-வது வார்டு பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ள கடை முன்பு நேற்று காலை 10 மணிக்கு திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மதுப்பிரியர்களால் பல்வேறு அசம்பாவிதங்களும், விபத்துகளும் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், பஸ் நிறுத்தத்துக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மதுப்பிரியர்களால் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி கோட்ட கலால் தனி தாசில்தார் வேலாயுதம், போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் கடையை திறக்க விடமாட்டோம் என்று கூறி மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story