சென்னிமலை அருகே முள் செடிகளை சுத்தம் செய்த போது உருவான 'திடீர்' குழி- அகழ்வாராய்ச்சி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
சென்னிமலை அருகே முள் செடிகளை சுத்தம் செய்த போது பானை வடிவில் திடீரென ஒரு குழி உருவானது. அதுகுறித்து அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே முள் செடிகளை சுத்தம் செய்த போது பானை வடிவில் திடீரென ஒரு குழி உருவானது. அதுகுறித்து அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பானை வடிவ குழி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பாலதொழுவு ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கமேடு. இங்குள்ள சாம்பமேடு என்ற இடத்தில் புரவியாத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் இருந்த முள் செடிகளை நேற்று அப்பகுதியில் உள்ளவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சுத்தம் செய்த இடத்தில் குழி ஒன்று இருந்ததை கண்டனர். பின்னர் அருகே சென்று எட்டிப்பார்த்தபோது சுமார் 6 அடி அகலத்தில் அந்த குழி இருந்தது. அதாவது பானை வடிவத்தில் குழியின் மேல் பகுதி அகலம் குறைவாகவும், உள்பகுதி அகலமாகவும் இருந்தது.
ஆராய வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கொடுமணல் பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியிலும் பாண்டியர்கள் வாழ்ந்ததாக கூறப்படுவது உண்டு. அதனால் சாம்பமேடு பகுதியிலும் வாழ்ந்த பழங்கால மக்கள் பூமியில் தானியங்களை சேமித்து வைப்பதற்காக பெரிய அளவிலான பானையை புதைத்து வைத்திருக்கலாம். அல்லது இது முதுமக்கள் தாழியாக கூட இருக்கலாம் என்றார்கள். மேலும் இந்த குழியை அகழ்வாராய்ச்சியாளர்கள் வந்து பார்த்து ஆராயவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
இந்த அதிசய குழி பற்றிய தகவல் கிடைத்ததும் பாலதொழுவு ஊராட்சி பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கு வந்து பார்த்துச்சென்றனர்.