இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? பொதுமக்கள் கருத்து
இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாம் அணியும் தானியங்கி கைக்கடிகாரம் தானாக இயங்கினாலும், அதன் தொடர் இயக்கத்திற்கு ஓர் இயக்கு விசை வேண்டும். நமது உடல் அசைவில் இருந்து அந்த விசையை அது எடுத்துக்கொள்கிறது. இல்லை என்றால் அது இயங்காமல் நின்றுவிடும். நமது உடலும் அப்படித்தான். அதற்கு விசை தேவைப்படுகிறது. அதற்குத்தான் உடற்பயிற்சி.
தாத்தா உடற்பயிற்சி செய்தாரா?
அப்படி என்றால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் காலத்தில் 'ஜிம்' இருந்ததா? அவர்கள் உடற்பயிற்சிகள் செய்தார்களா என்ற கேள்விகள் எழலாம். அதற்கு இல்லை என்றே பதிலும் சொல்லிவிடலாம்.
ஆனால் அப்போது பாசுமதி அரிசியும், பாலும் பாக்கெட்டுகளில் கிடைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
அவர்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் உழைப்பு ஓர் அங்கமாக இருந்தது.
தாத்தா நிலம் உழுதார். நெல் விளைவித்தார். பசு வளர்த்தார். பால் கறந்தார். தினதினம் தேவைக்கு நெடுந்தூரம் நடந்தார். பாட்டி நெல் குத்தினார். ஆட்டு உரல், அம்மிக்கல் அரைத்தார். நீர் இறைத்தார்.
இன்று நமது வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதே! தொழில்நுட்பம் வளரவளர, எந்திரங்களும் பெருக பெருக உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். அடுத்த தெருவில் இருக்கும் கடையில் மெழுகுவர்த்தி வாங்குவதற்குக்கூட நமது பையன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்கிறான்.
மன அழுத்தம்
நாமோ இருந்த இடத்தில் இருந்து கொண்டே அத்தனை வேலைப்பளுவையும் மூளையில் அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். இதனால் மன அழுத்தம். புதுப்புது நோய்களும் நம்மை தொற்றிக்கொள்கின்றன.
ஒரு காலத்தில் சர்க்கரை நோயை பணக்கார நோய் என்று பெருமையாக கிராமங்களில் பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டதால் அந்த நோய் வந்ததை அவர்கள் அறியவில்லை. இன்று உணர்கிறார்கள். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிறார்கள். ஆனால் அதை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா? இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.
புத்துணர்ச்சி
மீனாட்சி (தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி):- நான் பிளஸ்-2 படித்து வருகிறேன். விளையாட்டு விடுதியில் தங்கி படிப்பதால் தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறேன். அதிகாலையில் எழுவதும், உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கிறது. பள்ளியில் பாடத்தை கூர்ந்து கவனிக்க முடிகிறது. அதே நேரத்தில் பள்ளியில் சக மாணவிகள் பலர் உடற்பயிற்சி இன்றியும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இன்றியும் சேர்வாக இருப்பதை பார்க்க முடிகிறது. உடற்பயிற்சி இல்லாமலும், விளையாட்டில் ஆர்வம் இல்லாமலும் இருக்கும் மாணவ-மாணவிகள் பள்ளியை விட்டால் வீடு, வீட்டை விட்டால் பள்ளிக்கூடம் என்று குறுகிய வட்டத்தில் வாழ்கிறார்கள். இதனால், வெளி உலகமே தெரியாமல் அவர்கள் வளர்கிறார்கள். இளமைப் பருவத்தில் உடற்பயிற்சி செய்யாத பலரும், 40 வயது கடந்த பின்னர் டாக்டரின் அறிவுரையின் பேரில் நடைபயிற்சி செல்வதை பார்க்க முடிகிறது.
பிரபா (உடற்கல்வி ஆசிரியை, கம்பம்):- பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீடுகளில் சிறிய வேலை கூட செய்ய விடுவது இல்லை. குழந்தைகளை வீட்டு வேலைகளை செய்ய பழக்க வேண்டும். அதுவும் ஒருவித உடற்பயிற்சி தான். இரவில் தாமதமாக சாப்பிடுவது மற்றும் புரோட்டா, பொரித்த கோழி போன்று எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகளை இரவில் சாப்பிடுவதோடு, நடைபயிற்சி, உடற்பயிற்சி இல்லாததால் குழந்தைகளுக்கு காலையில் பசியின்மை ஏற்படுகிறது. இதனால், காலை உணவை சாப்பிடாமல் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வருவது அதிகரிக்கிறது. பள்ளி மைதானத்தில் சிறிது நேரம் விளையாடினால் கூட சோர்வடைகின்றனர். செல்போன் மோகத்தாலும் மாணவ-மாணவிகள் சுறுசுறுப்பாக இருக்காமல் மந்தமான நிலையில் காணப்படுகின்றனர்.
ஆரோக்கியம்
ரிஷப் (என்ஜினீயர், தேனி):- நான் பள்ளி படிக்கும் நாட்களில் இருந்தே அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி செல்வது, உடற்பயிற்சி செய்வது வழக்கம். தற்போதும் அது தொடர்கிறது. இதனால், என்னை நான் ஆரோக்கியமாக உணர்கிறேன். ஆனால், என்னுடைய சக நண்பர்கள் பலரும் அதிகாலையில் எழுவதையும், நடைப்பயிற்சி செய்வதையும் மிகுந்த சிரமமான செயலாக உணர்கிறார்கள். செல்போனில் பப்ஜி விளையாடும் போது கூட நிறைய நண்பர்கள் இணைகிறார்கள். ஆனால், மைதானத்துக்கு சென்று விளையாடுவதற்கு வருவது இல்லை. செல்போன் பயன்பாடு அதிகரிப்பது தான் இளைஞர்களை ஆரோக்கியமற்றவர்களாகவும், நோயாளிகளாகவும் மாற்றி வருகிறது என்றே சொல்லலாம்.
கணேஷ் (எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர், தேனி):- எனக்கு 53 வயதாகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து வருகிறேன். உடலில் இருந்து வியர்வை எந்த அளவுக்கு வெளியேறுகிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியமாகவும், உடலில் ரத்த ஓட்டம் நல்ல நிலையிலும் இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் போதும் நோய், நொடியின்றி வாழ முடியும். என்னுடைய வயது நண்பர்கள் பலருக்கும் தலையில் முடி உதிர்ந்தும், தலை முடி நரைத்தும், ஆரோக்கிய குறைபாட்டுடனும் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதை தவறாமல் கடைபிடிப்பதும், சீரான உணவுப் பழக்கமும் தான் காரணம்.
நல்ல உணவு, உடற்பயிற்சி
முருகன் (மாவட்ட விளையாட்டு அலுவலர், தேனி):- மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் தான் அதிக அளவில் வருகிறார்கள். மற்றபடி உடல் நலனை பேண வேண்டும் என்ற நோக்கில் வரும் இளைஞர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அந்த காலங்களில் பள்ளிக்கு குறைந்தது 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்கள். ஆரோக்கியமான உணவு சாப்பிட்டார்கள். இதனால், வலிமையான உடலமைப்பை பெற்றிருந்தார்கள். தற்போது வீட்டு வாசலில் பள்ளி வாகனம் வந்து நிற்கிறது. பள்ளி வளாகத்துக்குள் மாணவ-மாணவிகளை இறக்கி விடுகிறது. பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு கூட நடந்து செல்லும் பழக்கம் இல்லை. குழந்தைகளிடம் செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடும் அதிக அளவில் காணப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து எண்ணெயில் பொரித்த இறைச்சிகளை அதிகம் சாப்பிடுகின்றனர். அறிவை வளர்க்க கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவும், உடற்பயிற்சியும் அவசியம். பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் இதை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.