கார், வேன் நிறுத்துவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கீரப்பாளையம் மெயின் ரோட்டில் கார், வேன் நிறுத்துவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி,
புவனகிரி நகரத்தை சேர்ந்த வாடகை கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள் கீரப்பாளையம் ஊராட்சி மெயின்ரோட்டில் அனுமதி இல்லாமலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வேன், கார்களை நிறுத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, அப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரமும் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் வேன் மற்றும் கார்கள் கீரப்பாளையம் ஊராட்சி மெயின்ரோட்டில் நிறுத்தப்படுவதை கண்டித்து கீரப்பாளையத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடை அடைப்பு
அப்போது பொதுமக்கள், கீரப்பாளையம் மெயின்ரோட்டில் கார் மற்றும் வேன்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அதற்கு போலீசார், இது குறித்து உரிய நடவடிக்கை எடு்க்கப்படும் என்றனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புவனகிரி-சிதம்பரம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான கடைகளையும் நேற்று வியாபாரிகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.