பழனியில் பொதுமக்கள் சாலை மறியல்
பழனியில் தனியார் மண்டபம் நிர்வகிப்பதில் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழனி அடிவாரம் சன்னதி ரோட்டில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான மண்டபம் உள்ளது. நேற்று அந்த சமுதாயத்தை சேர்ந்த பழனி, பழைய ஆயக்குடி, மானூர் உள்பட 7 கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் மண்டபத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் மண்டபத்தை நிர்வகிப்பது தொடர்பாக கூட்டம் நடத்த மண்டபத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது மண்டபத்தை பராமரித்து வரும் நபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மண்டபம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பழனி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இதுதொடர்பாக பழனி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சசிக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தற்காலிகமாக மண்டபம் பூட்டப்படும் என்றும், பாதுகாப்புக்காக மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.