கண்ணமங்கலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
கண்ணமங்கலம் அருகே உள்ள கம்மவான்பேட்டையை தனி வருவாய் கிராமமாக மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள கம்மவான்பேட்டையை தனி வருவாய் கிராமமாக மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணுவப்பேட்டை
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கம்மவான்பேட்டை கிராமம் ஆற்காடு செல்லும் ரோட்டில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் வீட்டுக்கு வீடு தந்தை, மகன், பேரன் என ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இந்த ஊரை ராணுவப்பேட்டை என தமிழக முன்னாள் கவர்னர் கே.கே.ஷா அழைத்துள்ளார்.
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஏதேனும் நலத்திட்டங்களை பெற அரசிடம் விண்ணப்பங்கள் வழங்கினால், கம்மசமுத்திரம் வருவாய் கிராமம் என உள்ளதால் காலதாமதம் ஆகிறது. மேலும் பட்டா, வீடு சம்பந்தமான விவரங்கள் கம்மசமுத்திரம் வருவாய் கிராமம் என ஆகிவிடுகிறது.
எனவே கிராம பொதுமக்கள் அனைவரும் கம்மவான்பேட்டை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். 3,524 மக்கள் தொகை கொண்ட கம்மவான்பேட்டையை தனி வருவாய் கிராமம் என மாற்ற ஊராட்சி மன்றத்திலும் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேலூர் மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு அனுப்பியும் பலனில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் நேற்று கிராம நிர்வாக அலுவலகம் முன்பு, ஆற்காடு செல்லும் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமிஏழுமலை, வார்டு உறுப்பினர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர். தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் உதயகுமார், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சுரேஷ் ஆகியோரிடம் மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த போராட்டம் காரணமாக கண்ணமங்கலம்- ஆற்காடு ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வேலூர் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சமரசம் செய்தபின் போக்குவரத்து சீரானது.