வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

ஜோலார்பேட்டை அருகே ஏற்கனவே கொடுத்த இலவச வீட்டு மனையில் வீடு கட்டியது போக மீதமுள்ள இடத்தில் மற்றவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே ஏற்கனவே கொடுத்த இலவச வீட்டு மனையில் வீடு கட்டியது போக மீதமுள்ள இடத்தில் மற்றவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீட்டுமனை பட்டா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2000-ம் தி.மு.க. ஆட்சியின் போது 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 3 செண்ட் அளவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வருகிற 21-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க அரசுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகிறார்கள்.

சாலை மறியல்

அதன்படி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள காலியிடங்களை அளக்க வருவாய்த்துறையினர் சென்று காலி இடங்களை அளந்துள்ளனர். அங்கு ஏற்கனவே 3 செண்ட் இடம் வழங்கியுள்ள நிலையில் அதே இடத்தில் வீடு கட்டிய இடம் போக காலியாக உள்ள இடத்தையும் அதிகாரிகள் அளந்து வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கொடுத்த இடத்தில் காலியிடங்களை அளக்கக்கூடாது என அதிகாரிகள் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென வேட்டப்பட்டு -திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு கணேசன், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் முறையாக மனு அளித்து நிவாரணம் பெற வேண்டும் என தெரிவித்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story