குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெருவிற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பொது குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டராக பணிபுரிந்து வருபவரிடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது, அவர் சரியான பதிலை கூறாமல் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டு பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்பிரபு, ஊராட்சி செயலாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் தனஞ்ஜெயன் மற்றும் அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டரை மாற்றி விடுவதாகவும், உடனடியாக மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் சிரமமடைந்தனர்.


Next Story