பொதுமக்கள் சாலை மறியல்
நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்தவகையில் நெடுஞ்சாலை துறையினர் நேற்று முன் அறிவிப்பின்றி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள பூந்தாழை சாலையில் உள்ள வீடு மற்றும் நிலங்களை பொக்லின் எந்திரம் மூலம் அப்புறப்படுத்த வந்தனர்.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் தற்போது குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை அப்புறப்படுத்த வந்த நெடுஞ்சாலைத்துறையினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உரிய இழப்பீடு தராமல் தங்களது நிலங்களை கொடுக்க மாட்டோம் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி, மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பழனிச்சாமி, வசந்தராஜ், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை மறியல்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக 16 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.இந்த சாலை மறியல் காரணமாக சிதம்பரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும்பொருட்டு போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.