பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x

பேரணாம்பட்டு அருகே குடிநீர் உப்பாக வருவதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே டி.டி.மோட்டூர் ஊராட்சியை சேர்ந்த கமலாபுரம் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள காளியம்மன் கோவில் அருகில் பழைய ஆழ்துளை கிணறு மற்றும் சிந்த கணவாய் பஸ் நிறுத்தம் கெங்கையம்மன் கோவில் அருகிலுள்ள ஆழ்துளை கிணறு மூலம் 3 நாட்களுக்கு ஒருமுறை கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் மேடான பகுதிக்கு கிடைப்பதில்லை. இதனால் கிராமமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் ஆழ்துளை கிணறுகளுக்கு இடையில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆழ்துளை கிணறு அமைத்து கமலாபுரம், சிந்தகணவாய், டி.டிமோட்டூர், மொரசப்பல்லி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 50-க்கு மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்.

இதனால் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து, உப்புநீராக மாறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கமலாபுரம் பஸ் நிறுத்தத்தில் பேரணாம்பட்டு - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 10.30 மணியளவில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர் பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் செல்போனில், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story