கோவில் குளத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்


கோவில் குளத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
x

மயிலாடுதுறை அருகே கோவில் குளத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மங்கநல்லூர் நத்தம் ஜெயராஜ் நகரை சேர்ந்த பொதுமக்கள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் நத்தம் ஜெயராஜ் நகரில் அய்யனார்கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக இந்த குளத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போனதால் எங்கள் பகுதியில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த தண்ணீர் வடிவதற்கு வசதி கிடையாது. சமீப காலமாக இந்த குளம் தூர்வாரப்படாததால் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் மாசுப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அதனால், நாங்களே ஒன்றிணைந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டோம்.

ஆனால், சிலர் இந்த குளம் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. உங்களுக்கு இதில் உரிமையில்லை என்று கூறி குறிப்பிட்ட 5 பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். நாங்களும் ஊர் சார்பாக மனு அளித்துள்ளோம். ஏழை-எளிய மக்கள் பயன்படுத்திவரும் இந்த கோவில் குளத்தை நாங்களே பராமரித்து பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுகொடுப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், சுபஸ்ரீ ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊர் முக்கியஸ்தர்கள் ஒரு சிலரை மட்டுமே கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க அனுமதித்தனர்.



Next Story