பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x

பேரிடர் மீட்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தன்னார்வலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி,

பேரிடர் மீட்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தன்னார்வலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை வழங்கினார்.

பேரிடர் மீட்பு பயிற்சி

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் உத்தரவின்படி, தமிழகத்தில் 15 கடற்கரை மாவட்டங்கள் மற்றும் மலைப்பிரதேசமாக நீலகிரி மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பேரிடர் மீட்பு பயிற்சி பெற 6 தாலுகாக்களில் 150 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் கட்டமாக 75 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் தனியார் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் பயிற்சி நிறைவு செய்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை

நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 75 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக இருப்பதால், சுற்றுலா வருபவர்கள் நீர்நிலை பகுதிகளில் இறங்குவது மற்றும் ஆபத்தான இடங்களில் செல்போனில் செல்பி எடுப்பது போன்றவற்றின் போது ஏற்படும் விபரீதங்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்களாகிய நீங்கள், பயிற்சி காலத்தில் வழங்கிய அறிவுரை மற்றும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வருகிற வடகிழக்கு பருவமழை காலங்களில், பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story