பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்


பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்
x

மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர்

மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாண்டஸ் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வேலூரில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் ஏராளமானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

இந்தநிலையில் மழை காரணமாக இன்றும் (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மழையின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணங்களை தவிர்க்க வேண்டும்

மாண்டஸ் புயலின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் சுமார் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும். எனவே, பொதுமக்கள் மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் உயர்மின்அழுத்த கோபுரங்கள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்கவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ மற்றும் வாகனங்கள் நிறுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், பால்பொருட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் டார்ச் ஆகியவற்றினை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நாளை (அதாவது இன்று) புயல் கரையை கடந்த பின்பும், புயலின் தாக்கங்கள் குறையும் வரையிலும் மற்றும் அரசினால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் வரையிலும் பொதுமக்கள் தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story