உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- சாலைமறியல்


உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- சாலைமறியல்
x

திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால்கரையில் உள்ள வீடுகளை இடிப்பதற்கு பொதுபணித்துறை அதிகாரிகள் முயன்றதால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால்கரையில் உள்ள வீடுகளை இடிப்பதற்கு பொதுபணித்துறை அதிகாரிகள் முயன்றதால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் நடந்த சாலைமறியல் போராட்டத்தின்போது, தொழிலாளி ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் நோட்டீஸ்

திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால் ஓடை காமராஜர் சாலை, டி.பி.ரோடு, ஜீவாநகர் வழியாக கடலில் கலக்கிறது. இந்த ஓடையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த ஓடை, நீர் நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதாக தனிநபர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் உள்ள குடியிருப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 23 வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும், ஜீவாநகர் பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் நேற்று காலையில் ஜீவாநகர் பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாகவும், ஏற்கனவே பிளான் அப்ரூவல் வாங்கி தான் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் வீடுகளை இடிக்க்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுமார் 100-க்கு மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக உதவி கலெக்டரிடம் நேரில் புகார் மனு அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால் உதவி கலெக்டர் அலுவலக பணி காரணமாக தூத்துக்குடி சென்றிருந்ததால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததால், மாலை 3 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பின்னர் பகத்சிங் பஸ்நிலையம் முன்பு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ஜீவாநகரை சேர்ந்த கோபால் மகன் கூலி தொழிலாளி ரத்தினம் (வயது 33) என்பவர், தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை திடீரென தனது உடலில் ஊற்றினார். உடனடியாக அங்கு நின்ற போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்து, ரத்தினத்தை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உதவி கலெக்டர் புஹாரி அலுவலகத்தில் வைத்து பேசிக் கொள்லாம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜீவாநகர் பகுதி மக்கள் மீண்டும் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு உதவி கலெக்டர் புஹாரி, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருச்செந்தூர் பஸ்நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story