முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்


முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x

முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ.- ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொன்னிரை கிராமம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி ஊராட்சி பொன்னிரை கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொன்னிரையில் ஒரு முழு நேர ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன்கடையில் வாரத்தில் 3 நாட்கள் பொன்னிரையிலும், 2 நாட்கள் ஆலத்தம்பாடியிலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.

சமீபத்தில் அந்த ரேஷன் கடை முறையாக திறக்கப்படவில்லை எனவும், ஒரு நாளைக்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே திறந்து இருந்ததாகவும் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த ரேஷன் கடையில் முன்பு பணியாற்றிய ஊழியர் ஒருவர் குடும்ப அட்டைதாரர்களிடம் கைரேகை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ரேஷன் பொருட்களை முறையாக வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

போராட்டம்

இந்தநிலையில் நேற்று ரேஷன் கடைக்கு மற்றொரு ஊழியர் பொருட்கள் வழங்க வந்தார். ஆனால் முன்பு பணியாற்றி ஊழியர் ஒருவர் எங்களிடம் கைரேகை பெற்று கொண்டு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை என கூறி பொன்னிரை கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வார்டு உறுப்பினர் தமிழரசி பால்ராஜ் தலைமையில் ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் மாரிமுத்து எம்.எல்.ஏ., ஆலத்தம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் பொதுமக்கள் தங்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை என கூறினர். இதையடுத்து எம்.எல்.ஏ., திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த தகவலை ஊராட்சி மன்ற தலைவரும், எம்.எல்.ஏ.வும் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story