சேதமடைந்த தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதி
நரிக்குடி அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சேதமடைந்த தரைப்பாலம்
நரிக்குடி பகுதியில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததாலும், கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் இந்தப்பகுதி முழுவதும் நல்ல விளைச்சல் கிடைத்தது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருதுமால் நதி தூர்வாரப்பட்டது. இருப்பினும் தற்போது கிருதுமால் நதி முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்நிலையில் நரிக்குடி அருகே புதையனேந்தல் பகுதியில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
நரிக்குடி அருகே அத்திகுளம் புதையனேந்தல் கிராமத்தின் அருகே கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை
இந்த தரைப்பாலம் அமைத்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததாலும், வைகை ஆற்றிலிருந்து கிருதுமால் நதியில் அதிக அளவு தண்ணீர் திறந்து சென்றது.. தண்ணீர் அதிக அளவு சென்றதால் தரைப்பாலம் முற்றிலும் சேதமானது. தரைப்பாலம் சேதமடைந்ததால் புதையனேந்தல் மக்கள் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த நதியினை தாண்டித்தான் புதையனேந்தல் ஆதி திராவிட மக்களின் மயானம் இருந்து வருகிறது. தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் மழைகாலங்களில் யாராவது இறந்தால் உடல்களை எடுத்துச் செல்லமுடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே பொதுமக்களின் நலன்கருதி கிருதுமால் நதியின் குறுக்கே சேதடைந்த பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.