பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க தடை: குடும்பத்தினருடன் தம்பதி உண்ணாவிரதம்-சேலத்தில் குடியரசு தினத்தன்று பரபரப்பு
பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க தடை செய்கிறார்கள் என்று குடும்பத்தினருடன் தம்பதி உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் சேலத்தில் குடியரசு தினத்தன்று பரபரப்பு ஏற்பட்டது.
உண்ணாவிரதம்
சேலம் அழகாபுரம் புதூர் ராமன்குட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அப்போது, பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க அந்த பகுதியில் உள்ளவர்கள் தடை செய்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி உண்ணாவிரதம் இருப்பதாக ராஜேந்திரனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். குடியரசு தினவிழாவில் ஒரு குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொய்வழக்கு
தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு சென்று ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் கூறும் போது, 'பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க விடாமல் அந்த பகுதியில் உள்ளவர்கள் தடுத்து வருகின்றனர்.
இதுபற்றி போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே, அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எங்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.