ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்


ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
x

கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரை பகுதிகளில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

புதுக்கோட்டை

மணமேல்குடி:

ஆடி அமாவாசை

மணமேல்குடி அருகே கட்டுமாவடி கடற்கரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு கடற்கரையையொட்டி ராமநாதசுவாமி கோவில் உள்ளது. ராவணனிடமிருந்து சீதையை மீட்க சென்ற ராமர் இந்த வழியாக ராமேஸ்வரம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அனுமன் ராமரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் பஞ்சமூர்த்திகள் கடலுக்குள் சென்று புனித நீராடுதல் (தீர்த்தவாரி) நடைபெறுவது வழக்கம். சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலுக்குள் இறங்கி புனிதநீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தர்ப்பணம்

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமி ஊர்வலமும் நடைபெற்றது. இதையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திரளான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி புனித நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மணமேல்குடி

இதேபோல் மணமேல்குடி கோடியக்கரையில், கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய 3 திசைகளில் கடல் சூழ்ந்தும், மேற்கு திசையில் மாங்க்ரோவ் தாவரங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகவும் உள்ளன. கடல் 'ப' வடிவில் உள்ளதால் அலைகள் அடிப்பதில்லை. கடலுக்குள் மூலஸ்தான கோபுரத்துடன் கூடிய விநாயகர் கோவில் உள்ளது. இதையடுத்து கடலில் பொதுமக்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் வட்டார பகுதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காசிக்கு வீசுமகூட என்று அழைக்கப்படும் திருவிளையாட்பட்டி திருமூலர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அருகில் உள்ள வெள்ள ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் திருவரங்குளம் சிவன் கோவில் தெப்பக்குளத்திலும் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.


Next Story