உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2023 2:30 AM IST (Updated: 13 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

சின்னமனூர் பொன்நகர் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் குடும்பத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று உத்தமபாளையத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னமனூர் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். ஆனால் அந்த நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு இடம் என்று கூறிவிட்டனர். எனவே அந்த நிலத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான பாலபாரதி தலைமை தாங்கினார். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story