புதிய தமிழகம் கட்சியினர் போராட்டம் நடத்த முயற்சி
டாஸ்மாக் கடையின் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
டாஸ்மாக் கடையின் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் வேலூரை அடுத்த தெள்ளூர் கூட்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நேற்று மதுபாட்டில்களை உடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
ஆனால் திட்டமிட்டப்படி புதிய தமிழகம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த டாஸ்மாக் கடையின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மாலை 3 மணியளவில் புதிய தமிழகம் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெய்சீலன் மற்றும் நிர்வாகிகள் காரில் டாஸ்மாக் கடையை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் சிறிது தூரத்தில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த அனுமதியில்லை. அதையும் மீறி நடத்த முயன்றால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். இதையடுத்து ஜெய்சீலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் போராட்டம் நடத்துவதற்காக இருசக்கர வாகனம், வேனில் வந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.