விளாத்திகுளம் அருகே புதூர்வீரகாளியம்மன் கோவில் கொடை விழா
விளாத்திகுளம் அருகே புதூர்வீரகாளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வீரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு வாகைக்குளம் கண்மாய் கரை கரையடி அம்மனுக்கும், கருப்பசாமிக்கும் பொங்கல் வைத்து அபிஷேக தீபாராதனை நடந்தது. அங்கிருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு புதூர் ஆதிலிங்கேஸ்வரருக்கு அபிஷேக தீபாராதனையும், வீரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 408 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து இரவு 10 மணிக்கு பொங்கல் வைத்து கரகம் எடுத்து முளைப்பாரி, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அதிகாலை அம்மனுக்கு கிடா வெட்டுதல், நேர்த்தி கடன் செலுத்தல் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் கும்மி, கோலாட்டம், சிலம்பாட்டமும், இரவு அரிச்சந்திர நாடகமும் நடந்தது.