புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
டவுனில் குவிந்தனர்
தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் பொருட்களை வாங்குவதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து புதுக்கோட்டை நகரப்பகுதியில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர். இதனால் டவுனில் கடைவீதி உள்பட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலராஜ வீதி, சத்தியமூா்த்தி ரோடு, ஆலங்குடி ரோடு, பழைய பஸ் நிலையம் அருகே, டி.வி.எஸ். கார்னர் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதேபோல் கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பஸ்களில் புதுக்கோட்டை டவுனுக்கு வந்தனர். தீபாவளி கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற நபர்களால் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சிறப்பு பஸ்கள்
டவுன் பஸ்கள், திருச்சி, கோவை, மதுரை, சிவகங்கை செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலில் குற்றச்சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.