புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டிடம் விரைவில் திறப்பு
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்த நிலையில் புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
அரசு பல் மருத்துவக்கல்லூரி
புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி புதிதாக தொடங்கப்படும் என கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகேயே ரூ.63 கோடியே 41 லட்சம் மதிப்பில் 1 லட்சத்து 83 ஆயிரம் சதுர அடியில் பணிகள் நடைபெற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் புதிய கட்டிடத்தை ஆய்வு செய்து சென்றனர். அதன்பின் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி அளித்துள்ளனர். நடப்பாண்டில் 50 மாணவர் சேர்க்கைக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல் மருத்துவக்கல்லூரி புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
ரூ.63 கோடி மதிப்பில் கட்டுமான பணி
இதுகுறித்து மருத்துவத்துறை வட்டாரத்தில் அதிகாரிகள் கூறுகையில், ``புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சைக்கு தனி கட்டிடமும், வகுப்பறைக்கு தனி கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி கட்டிடம், டீன் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் தனித்தனியாகவும், கேண்டீன் வசதியும் உள்ளது. ஆடிட்டோரியம், நூலக வசதியும் உள்ளது. ஒரு வகுப்பறையில் சுமார் 80 பேர் வரை அமரும் வசதி உள்ளது.
புதிய கட்டிடத்தில் தற்போது இறுதிக்கட்டமாக பெயிண்டிங் மற்றும் உபவேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 50 மாணவர் சேர்க்கையானது வருகிற கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இளநிலை பி.டி.எஸ். படிப்பு 4 ஆண்டு காலமாகும். இதில் முதல் பேட்ஜ் முடிந்த பின் முதுநிலை படிப்பு தொடங்க அனுமதி கோரவாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற காலங்களில் இந்த 50 எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவ சிகிச்சை பிரிவு புதிய மருத்துவமனைக்கு மாற்றப்படும்'' என்றனர்.