புதுக்கோட்டையில் வீடு, வீடாக சென்று தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டையில் வீடு, வீடாக சென்று தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் வீடு, வீடாக சென்று தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்
தி.மு.க. இளைஞரணியில் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் 'இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்' நேற்று தொடங்கப்பட்டு உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முகாமை தொடங்கி வைப்பதற்காக தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் நல உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க.வினர் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வீடு வீடாக...
தொடர்ந்து புதுக்கோட்டை பள்ளிக்கூட தெருவில் வீடு, வீடாக சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்களிடம் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்து பெற்று சென்றார்.
ஒரு வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஜோவின் என்று பெயர் சூட்டினார். மேலும் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பெண்கள், உதயநிதி ஸ்டாலினை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர்.
கலந்துகொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் சந்திரசேகர், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், சோபியா, பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட கவன்சிலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.