புதுக்கோட்டையில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
புதுக்கோட்டையில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சு.கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். தூத்துக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.சங்கரன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் மற்றும் புதுக்கோட்டை பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் புதுக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பொருட்டு அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடிவடையவில்லை. இந்த சாலை பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பாலத்தின் இரு பக்கமும் உள்ள அணுகு சாலைகளை பழுது பார்த்து தரமான தார்சாலைகளாக மாற்ற வேண்டும். மேலும், பாலத்தின் இரு பக்கங்களிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். கீழ கூட்டுடன்காடு சாலையை, புதுக்கோட்டை பழைய போலீஸ் நிலைய சாலையுடன் இணைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சோனியா அனிதா, செயலாளர் கோகிலா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கான ஊக்கத் தொகை தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்கிட வேண்டும். மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் ஊதியத்தை நேரடியாக ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பணி நேரத்தை வரன்முறை செய்ய வேண்டும். பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.