ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி, நல்லெண்ணெய் வைத்து பூஜை
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி, நல்லெண்ணெய் வைத்து பூஜிக்கப்படுகிறது.
ஆண்டவன் உத்தரவு பெட்டி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில், கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
அரிசி, நல்லெண்ணெய்
அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்தப் பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சுள்ளிகரடு பகுதியை சேர்ந்த ஜி.முத்துசாமி (வயது 37) என்ற பக்தரின் கனவில் உத்தரவான அரிசி, நல்லெண்ணெய் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 8-ந்தேதி முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை, அத்திரி என்ற பசு, அசுவம் என்ற குதிரை, 2 திருமாங்கல்ய சரடு ஆகிய 4 பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
விலை குறையுமா?
இது குறித்து பக்தர்கள் கூறுகையில் "சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது வைத்து பூஜிக்கப்படும் அரிசி, நல்லெண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்து அவற்றின் விலை உயருமா? அல்லது இவைகளின் உற்பத்தி அதிகமாகி விலை குறையுமா என்பது போக போகத்தெரியும்" என்றனர்.