சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டிய புளியஞ்சோலை
சுற்றுலா பயணிகள் வருகையால் புளியஞ்சோலை களைகட்டியது.
உப்பிலியபுரம்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வனப்பகுதி மிகுந்த புளியஞ்சோலைக்கு திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், நேற்று விடுமுறை நாள் என்பதாலும் பலர் குடும்பத்துடன் புளியஞ்சோலை பகுதியில் குவிந்தனர். இதையடுத்து அப்பகுதி சுற்றுலா பயணிகளால் களை கட்டியது. அக்னி நட்சத்திரத்தின் வெப்பத்தை தணிக்க அய்யாற்றில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். காலை முதல் மாலை வரை கார், வேன், இருசக்கர வாகனங்கள், பஸ் மூலம் பொதுமக்கள் வந்த வண்ணமிருந்தனர்.
கடந்த மார்ச் மாதம் புளியஞ்சோலை பகுதியில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் இறந்ததையடுத்து, புளியஞ்சோலையில் உள்ள நாட்டாமடு மற்றும் வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் தடை விதித்தனர். அந்த தடையை மீறி சுற்றுலா பயணிகள் நேற்று வனப்பகுதிக்குள் ஊடுருவியதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் நாட்டாமடு மற்றும் வனப்பகுதிகளுக்குள் ஊடுருவதை தடுப்பதற்காக போடப்பட்டிருந்த முள் கற்றைகள், மரங்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து வனக்காப்பாளர்கள் மணிகண்டன், சத்தீஸ் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் உதவி வன அலுவலர்களின் கண்காணிப்பால் அபாயகரமான பகுதியான நாட்டாமடு பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து புளியஞ்சோலை பகுதியில் தடையை நீக்கி, பாதுகாப்பு பணிகளை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகளின் அத்தியாவசிய தேவைகளான கழிவறைகள், உடை மாற்றும் அறைகள், பெண்களுக்கான ஓய்வறைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.