புலியூர் பேரூராட்சியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது. இதனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புலியூர் பேரூராட்சி
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், 12 வார்டுகளில் தி.மு.க.வும், பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கட்சி சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலாராணி (வயது 51) என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ராஜினாமா
கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி நடைபெற்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலரான புவனேஸ்வரியை தலைவராக தி.மு.க. கவுன்சிலர்கள் முன்மொழிந்து வழி மொழிந்ததால் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியதையடுத்து மார்ச் மாதம் 8-ந் தேதி புவனேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைதொடர்ந்து மார்ச் மாதம் 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அன்று தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் கலாராணி, பா.ஜனதா கவுன்சிலர் விஜயகுமார், தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் என 3 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். தேர்தலை நடத்த குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் தேவை என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க. கவுன்சிலர் வெற்றி
இதையடுத்து, புலியூர் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மே மாதம் 25-ந் தேதி மீண்டும் நடைபெற்றது. அப்போது போதுமான கவுன்சிலர்கள் தேர்தலுக்கு வராததால் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டநிலையில் 3-வது முறையாக நேற்று காலை 9.30 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக லீலா குமார் செயல்பட்டார். இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 கவுன்சிலர்களும் ஆஜராகினர். இதில் 3-வது வார்டு கவுன்சிலரான புவனேஸ்வரியை தலைவராக தேர்வு செய்ய தி.மு.க. கவுன்சிலர்கள் ரேவதி மற்றும் தங்கமணி ஆகியோர் முன்மொழிந்த நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் புவனேஸ்வரி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
தர்ணா
இதனை தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் கலாராணி பேரூராட்சி அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், புலியூர் பேரூராட்சி தலைவருக்கான பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, துணை தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்களிடம் என்னை தலைவர் பதவிக்கு முன்மொழிய வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர்கள் எந்த பதிலும் கூறாமல் வேறு ஒருவரை தலைவராக தேர்வு செய்து உள்ளனர். எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையில் எனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலரின் தர்ணாவை தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விதுன்குமார், ஜோதி ஆகியோர் கலாராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே கலாராணி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இதனால் நேற்று புலியூர் பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.