அதிக லாபம் பெற பயறு வகை பயிர்களை பயிரிடலாம்
விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற பயறு வகை பயிர்களை பயிரிடலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற பயறு வகை பயிர்களை பயிரிடலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் த.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயறுவகை பயிர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உளுந்து பயிரானது ஐப்பசி, கார்த்திகை, சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் விதைக்கப்படுகிறது.
எனவே இந்த பருவங்களில் மாவட்ட விவசாயிகள் பயறுவகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்து அதிக லாபம் பெறலாம். உளுந்து பயிரில் வம்பன் 8, வம்பன் 10 மற்றும் வம்பன் 11 ரகங்கள் நல்ல மகசூல் தரக் கூடியது.
விவசாயிகள் விதைப்பண்ணை அமைப்பதற்குத் தேவையான உளுந்து பயிரின் வல்லுனர் மற்றும் ஆதார நிலை விதைகளை அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெறலாம்.
அதிக லாபம்
விதைப்பண்ணை அமைக்க விதை வாங்கியதற்கான விற்பனை ரசீது மற்றும் சான்றட்டை மிக முக்கியம்.
விதைகளை விதைப்பதற்கு முன் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் பாக்கெட்டுகளை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.
விதைத்த 30 நாட்களுக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி ஏக்கருக்கு ரூ.205 பதிவு கட்டணமாக செலுத்தி விதைப் பண்ணையை பதிவு செய்து கொள்ளலாம்.
விதைச்சான்று அலுவலர்கள் மூலம் உயர் தொழில் நுட்பங்களை உரிய காலத்தில் செய்தால் ஏக்கருக்கு 500 முதல் 700 கிலோ வரை மகசூல் எடுக்கலாம். எனவே விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற பயறுவகைப் பயிர்களை பயிரிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.