புனவாசல் சாலை சீரமைக்கப்பட்டது
தினத்தந்தி செய்தி எதிரொலியாக புனவாசல் சாலை சீரமைக்கப்பட்டது.
புனல்வாசல் சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் இருந்து புனவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அரசு பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், மூலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் சிரமம்
இந்த சாலை மிகவும் குறுகலான சாலையாகவும், அடிக்கடி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறும் சாலையாகவும் இருந்தது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து சென்று வருவதிலும், அடிக்கடி பழுதடைந்த இந்த சாலையில் சென்று வருவதிலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
எனவே அடிக்கடி சேதமடையும் இந்த சாலையை அகலப்படுத்தி முழுமையான தார்சாலையாக சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் வெளியானது.
சீரமைக்கப்பட்டது
இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி 20 ஆண்டுகளுக்கு பிறகு புனவாசல் சாலை அகலப்படுத்தி முழுமையான தார்சாலையாக சீரமைக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.