பொதுமக்கள் திடீர் போராட்டம்
அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்
பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் உற்பத்தியாளர் சங்கம்
அவினாசியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் அப்பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவர் பால் வாங்குவதற்காக சங்கத்தில் உள்ள அறைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், ஈஸ்வரன் ஆகியோர் சங்கத்தின் அறைக்குள் செயலாளரை தவிர மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றும், எதற்காக உள்ளே சென்றாய் என்றும் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் கருணாகரன் புகார் செய்தார். அதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெங்கடாசலம் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கருணாகரன் புகார் மனு அனுப்பினார். இந்த புகார் தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராட்டம்
இந்த நிலையில் புதுப்பாளையம் ஊராட்சி கிராம மக்கள் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெங்கடாசலம், ஈஸ்வரன் ஆகியோர் மீது உண்மைக்கு புறம்பாக வழக்குப் பதியப்பட்டுள்ள சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவினாசி தாசில்தார் ரமேஷ், திருமுருகன்பூண்டி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிப்பதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
---