புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்


தினத்தந்தி 16 Oct 2022 1:00 AM IST (Updated: 16 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

ஈரோடு

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கோட்டை பெருமாள் கோவில்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் கடைபிடித்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். குறிப்பாக இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

ஈரோடு கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் மலர் மாலைகள் தொங்க விடப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலில் குவிந்தனர். இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மயார் பூஜை

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பவானி ரோட்டில் வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு மயார் பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


Next Story