புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலில் ரூ.1.25 கோடியில் திருப்பணிகள்


புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலில் ரூ.1.25 கோடியில் திருப்பணிகள்
x

புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலில் ரூ.1.25 கோடியிலான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலில் ரூ.1.25 கோடி மதிப்பில் ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம் கருங்கல் பதிக்கும் பணிகள், மின் பணிகள் மற்றும் நந்தவனம் சீரமைத்தல் உள்பட கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பாக நடக்க இருக்கும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

புரசைவாக்கத்தில் உள்ள பங்கஜம்மாள் உடனுறை கங்காதீசுவரர் கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் நிறைவுற்று இருப்பதால் இந்தாண்டு கோவில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் செய்யப்படுகிறது.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சுமார் ரூ.6 கோடியே 30 லட்சம் மதிப்பில் இந்த கோவிலுக்கு தங்கத்தேர் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. தங்கத் தேருக்கான மரத்தேரை இக்கோவில் அறங்காவலர் கோபிநாத் ரூ.31 லட்சம் செலவில் உபயமாக செய்து தருகிறார். 2 மாதத்துக்குள் அந்தப்பணிகள் முடிவுறும். அதனை தொடர்ந்து, தங்கத்தேர் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

கோவில் ராஜகோபுரம்

சென்னை மாநகராட்சியின் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பில் இந்த கோவில் தெப்பக்குளம் மேம்பாடுத்தப்படுகிறது. மழைநீர் குளத்துக்கு வந்து சேரும் வகையில் கட்டமைப்புகள் அமைக்கப்படுகின்றன. கோவிலின் ராஜகோபுரம், பிற சன்னதிகள் மராமத்து பணிகள், சுற்றுபிரகாரம் கருங்கல் பதிக்கும் பணி, நந்தவனம் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.1.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இதுவரை இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு திருப்பணிக்காக சுமார் ரூ.600 கோடியை உபயதாரர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

39 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்

தைப்பூச திருவிழாவுக்கான பணிகள் நடந்து வருகிறது. கோவில்களில் பவனி வரும் தேர்களை முன்கூட்டியே ஆய்வுசெய்து சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனி, தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் 10 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கடந்த 20 மாதங்களில் 444 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. வரும் பிப்ரவரி 26-ந் தேதிக்குள் 39 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே.எஸ். ரவிச்சந்திரன், இணை-கமிஷனர் ந.தனபால், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் பெ.வெற்றிக்குமார், அறங்காவலர் பி.ரத்தினம், உதவி கமிஷனர் எம். பாஸ்கரன், கோவில் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் சா.ராமராஜா, கோவில் தலைமை குருக்கள் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story