நெடுவாக்கோட்டையில் 1 லட்சத்து 74 ஆயிரம் கரும்புகள் கொள்முதல்
நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசுடன் வழங்க நெடுவாக்கோட்டையில் உள்ள வயல்களுக்கு கூட்டுறவு, வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து 1 லட்சத்து 74 ஆயிரம் கரும்புகளை கொள்முதல் செய்தனர்.
மன்னார்குடி:
நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசுடன் வழங்க நெடுவாக்கோட்டையில் உள்ள வயல்களுக்கு கூட்டுறவு, வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து 1 லட்சத்து 74 ஆயிரம் கரும்புகளை கொள்முதல் செய்தனர்.
கரும்பு சாகுபடி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை பகுதியில் பாரம்பரியமாக விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த பகுதியில் விவசாயிகள் பொங்கல் கரும்புக்கு சாண எருவையும், இயற்கை உரங்களையும் பயன்படுத்துவதுடன் இப்பகுதி மண்ணின் வளமும் சேர்ந்து பொங்கல் கரும்பிற்கு சிறந்த சுவையை கொடுப்பதால் இப்பகுதியில் விளையும் பொங்கல் கரும்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பொங்கல் பண்டிகை
நெடுவாக்கோட்டை மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளான மேலநாகை, மேலவாசல், காரிக்கோட்டை, எம்பேத்தி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் பொங்கல் கரும்பை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த பொங்கல் கரும்புகளின் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு கரும்பின் அளவு, தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர்.
1 லட்சத்து 74 ஆயிரம் கரும்புகள் கொள்முதல்
தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசுடன் கரும்பையும் சேர்த்து வழங்குவதால் அரசு சார்பிலும் நேரடியாக அதிகாரிகள் வயல்கள்களுக்கு வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசுடன் வழங்க மொத்தம் தேவைப்படும் 2 லட்சத்து 14 ஆயிரம் கரும்புகளில் 1 லட்சத்து 74 ஆயிரம் கரும்புகளை நெடுவாக்கோட்டை பகுதியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கூட்டுறவுத்துறை அதிகாரிகளும், வேளாண்மைத்துறை அதிகாரிகளும் நெடுவாக்கோட்டையில் உள்ள வயல்களுக்கு நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்தனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
அரசு கொள்முதல் செய்ததால் இந்த பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் ஓரளவு மன நிறைவு அடைந்துள்ளனர். தொடர்ந்து கரும்பு விற்பனை பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க விறுவிறுப்படையும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.