1,267 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1,267 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1,267 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
தஞ்சை மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ் ஒரத்தநாடு, கும்பகோணம், தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த 1-4-2023 முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் ரூ.108.60 என்ற வீதத்தில் அரவை கொப்பரையானது கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 424 விவசாயிகளிடமிருந்து 1,267 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாட்டில் உள்ளதால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு சென்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் மூலம் நடத்தப்படும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம்.
பொருளீட்டுக்கடன்
மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைத்து அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை 5 சதவீத வட்டி விகிதத்தில் பொருளீட்டுக்கடன் பெற்று பயனடையலாம். நடப்பாண்டு 57 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 31 லட்சம் பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் விற்பனைக்கூடங்களில் உள்ள கிடங்குகள், பரிவர்த்தனைக்கூடம், உலர்கள வசதிகள் மற்றும் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகுமாறு தஞ்சை வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சரசு கேட்டுக்கொண்டு உள்ளார்.