34 ஆயிரத்து 547 டன் நெல் கொள்முதல்
நாகை மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 547 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 547 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை தொடங்கிய நிலையில் 175 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
இதுவரை 34 ஆயிரத்து 547 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரத்து 137 டன் நெல் இயக்கம் செய்யப்பட்டும், 11 ஆயிரத்து 410 டன் நெல் இருப்பு வைக்கப்பட்டும் உள்ளது.
பணம் வசூல் செய்யக்கூடாது
இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கு 6 ஆயிரத்து 900 விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.59 கோடியே 79 லட்சத்து 23 ஆயிரத்து 290 வரவு வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மழை விட்டு 2 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மழை பெய்தால் நெல்மூட்டைகள் பாதுகாக்கும் வகையில் சீட், தார்பாய்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடம் யாரும் பணம் வசூல் செய்யக்கூடாது என ஊழியர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகார் பெட்டி
கொள்முதல் நிலையங்களை சிறப்பு கண்காணிப்புக்குழுவினர், லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. மேலும் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக விவசாயிகள் புகார்கள் தெரிவிக்க அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
நாகை அருகே கோவில்பத்து பகுதியில் உள்ள குடோனில், எடை மேடை மற்றும் நவீன முறையில் பேக்கிங் செய்யும் வசதியை ஏற்படுத்த அரசுக்கு அனுமதி கேட்டு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது
அதேபோல் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ெரயில் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்றார்.