தஞ்சை மாவட்டத்தில் 8¾ லட்சம் டன் நெல் கொள்முதல்


தஞ்சை மாவட்டத்தில் 8¾ லட்சம் டன் நெல் கொள்முதல்
x
தினத்தந்தி 26 July 2023 12:36 AM IST (Updated: 26 July 2023 5:30 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 8¾ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 8¾ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறியதாவது:-

நெல் கொள்முதல்

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் இதுவரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 587 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரசாயன உரங்கள் 100 சதவீதம் மானியத்தில் வழங்க 70 ஆயிரம் ஏக்கர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரம் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளில் இந்த ஆண்டு ரூ.23 கோடியே 71 லட்சம் மதிப்பில் 3,895 டன் காய்கறி வரத்து வந்துள்ளது. இதுவரை சராசரியாக 179 விவசாயிகளும், 8 ஆயிரத்து 689 நுகர்வோரும் பயனடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 2023-24-ம் ஆண்டுக்கு 456.65 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.61.79 கோடி வழங்கப்பட்டுள்ளது.

8¾ லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் அதிகபட்சமாக 391 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் 608 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 8 லட்சத்து 70 ஆயிரத்து 748 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 332 விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு ரூ.1,959 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.மின்வாரியம் சார்பில் இந்த ஆண்டு 45 டிரான்ஸ்பார்மர்கள் ரூ.1 கோடியே 57 லட்சத்து 5 ஆயிரம் செலவில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கடந்த நவம்பர் மாதம் அரவை பருவம் தொடங்கி ஏப்ரல் மாதம் 4-ந்தேதியுடன் முடிவடைந்தது. அரவை செய்த கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2821.25 வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story