1,800 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,800 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,800 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொப்பரை தேங்காய்
விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைப்பொருட்களை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 1,800 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தேங்காய் பருப்பு விலை ஒரு கிலோ ரூ.73.19 முதல் ரூ.90.99 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.110-க்கும், 6 மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
பதிவு செய்து கொள்ளலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் கண்காணிப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் வருகிற ஜூலை மாதம் 31-ந் தேதி வரையிலான காலம் வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைப்பொருட்களுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகள் இந்த திட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.