மேரக்காய் கிலோ ரூ.14-க்கு கொள்முதல்


மேரக்காய் கிலோ ரூ.14-க்கு கொள்முதல்
x
தினத்தந்தி 30 May 2023 1:45 AM IST (Updated: 30 May 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் மேரக்காய் கிலோ ரூ.14-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் மேரக்காய் கிலோ ரூ.14-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காய்கறி சாகுபடி

கோத்தகிரி பகுதி மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இந்த தொழிலை நம்பி சிறு விவசாயிகள், தேயிலை தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக பொதுமக்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாற்று விவசாயமாக தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கொய்மலர், காளான், ஸ்ட்ராபெர்ரி சாகுபடி, மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இருப்பினும் வனவிலங்குகள் தொல்லை, தொழிலாளர் பற்றாக்குறை, விதை, உரங்கள் மற்றும் இடுபொருட்களின் விலையேற்றம் ஆகிய சிக்கல்களை எதிர்கொண்டு, வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.

விளைச்சல் அதிகரிப்பு

கோத்தகிரி அருகே நெடுகுளா, எரிசிபெட்டா, இந்திராநகர், வா.ஊ.சி. நகர், கூக்கல்தொரை, மசக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிட்டு உள்ளனர். இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருவதுடன் காய்கறி, தேயிலை தோட்டங்கள் மீண்டும் பசுமைக்கு திரும்பி உள்ளன. மேலும் மேரக்காய் விளைச்சலும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மேரக்காய்க்கு நிலையான கொள்முதல் விலை கிடைக்கிறது. இதனால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் மேரக்காய் கிலோவுக்கு ரூ.15 வரையும், கோத்தகிரி காய்கறி மாண்டிகளில் கிலோ ரூ.14 வரையும் தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு போதுமான விலையாக உள்ளது. கடந்த ஆண்டு கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.30 வரை கொள்முதல் விலை கிடைத்தது. அதேபோல கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story