ரூ.9.8 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் கொள்முதல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னைப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.9.8 கோடி மதிப்பீட்டில் நவீன மேஜைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
பெருநகர சென்னை மாரகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னைப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறை பயணமாக டெல்லி சென்றபோது அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்டார். அதன் பின்பு டெல்லி பள்ளிகளில் உள்ளதை போன்று சென்னைப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் பயில்வதற்காக நவீன மேஜைகளை அமைக்க தீர்மானித்தார்.
இதனைத் தொடர்ந்து, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.9.8 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சென்னையில் உள்ள 108 மாநகராட்சி பள்ளிகளுக்கு 10,279 மேஜைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இதுவரை, 1,291 நவீன மேஜைகள் மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை உள்ள வகுப்புகளுக்கு ஏற்றார்போல் மேஜைகளின் அளவு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 முதல் 3ம் வகுப்பு வரை மஞ்சள் நிறத்திலும், 4 முதல் 5 வகுப்பு வரை ஆரஞ்சு நிறத்திலும், 6 முதல் 8ம் வகுப்பு இளஞ்சிவப்பு நிறத்திலும், 9 முதல் 12ம் வகுப்பு வரை நீல நிறத்திலும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.