கறிக்கோழி நுகர்வு குறைவால் கொள்முதல் விலை சரிவு
கறிக்கோழி நுகர்வு குறைவால் கொள்முதல் விலை சரிவு
பல்லடம்
பல்லடத்தில், கறிக்கோழி நுகர்வு குறைவால் கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
கறிக்கோழி பண்ணைகள்
பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம், தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து, இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்தநிலையில் கறிக்கோழி விற்பனை நுகர்வு குறைவால், விற்பனையில் மந்தம் ஏற்பட்டு, கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.124 இருந்தது தற்போது கிலோ 80 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது. இதனால் கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:
கொள்முதல் விலை சரிவு
புரட்டாசி மாதத்தால் கறிக்கோழி நுகர்வு குறைந்து கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டது. பின்னர் சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகைகளால், கறிக்கோழி விற்பனை சரிவு ஏற்பட்டது. வழக்கமாக பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை, இன்னும் விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால் கொள்முதல் விலையும் உயரவில்லை.
இந்த நிலையில், தற்போது கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 வரை செலவாகும் நிலையில், இதனால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் வாரங்களில் திருமணம், போன்ற விழாக்கள் உள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---------