மணிகண்டம் அருகே தூய சூசையப்பர் ஆலய தேர் திருவிழா


மணிகண்டம் அருகே தூய சூசையப்பர் ஆலய தேர் திருவிழா
x

மணிகண்டம் அருகே தூய சூசையப்பர் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது.

திருச்சி

மணிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டியில் தூய சூசையப்பர் ஆலயம் உள்ளது. திருச்சி மறைமாவட்டம், ஜெருசலேம் பங்குக்கு உட்பட்ட இந்த ஆலய 75-வது ஆண்டு விழா 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் மாலையில் பங்குத் தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஜெருசலேம் பங்குத்தந்தை அருள்தாஸ், நாகமங்கலம் பங்குத்தந்தை ஜெயராஜ் ஆகியோர் திருவிழா கூட்டு சிறப்பு திருப்பலியாற்றினர். அன்று இரவு 8 மணியளவில் பங்கு தந்தையர்கள் தேரை மந்திரித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணியளவில் வண்ண மின் விளக்குகள், மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரபவனி வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் அந்தோணியார், மாதா, சூசையப்பர் ஆகிய சொரூபங்கள் பொருத்தப்பட்ட 3 தேர்கள் வீதிஉலா நடைபெற்றது. வாண வேடிக்கை மேளதாளம் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் கோலார்பட்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 7 மணியளவில் மீண்டும் ஆலயத்தை அடைந்தது. விழாவில் கோலார்பட்டி, முடிகண்டம், மேக்கு, டி நசரேத், நாகமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜெருசலேம் பங்கு தந்தை மற்றும் கோலார்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story