புஷ்பரத ஏரித்திருவிழா தேர் செல்லும்பாதை சீரமைப்பதில் தாமதம்-நடவடிக்கை எடுக்கப்படுமா?


புஷ்பரத ஏரித்திருவிழா தேர் செல்லும்பாதை சீரமைப்பதில் தாமதம்-நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

வல்லண்டராமன் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரி திருவிழாவில் தேர் செல்லும் பாதைகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

அணைக்கட்டு

வல்லண்டராமன் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரி திருவிழாவில் தேர் செல்லும் பாதைகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொற்கொடி அம்மன்

வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் புஷ்பரத ஏரி திருவிழா சுமார் 200 ஆண்டுகளாக நடந்து வருகின்றது.

இந்த ஆண்டு திருவிழா வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடக்கிறது. இதனையொட்டி வல்லண்டராமம், அண்ணாச்சிபாளையம், பனங்காடு வேலங்காடு ஆகிய 4 கிராமங்களில் புஷ்பரதம் வீதி உலா வர உள்ளது.

புதன்கிழமை பகல் 11 மணிக்கு புஷ்பரதம் வேலங்காடு ஏரியை வந்தடைகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.இந்த நிலையில் புஷ்பரதம் செல்லும் பாதைகள் குண்டும், குழியுமாக மாறி மழை நீர் தேங்கி காணப்படுகிறது.

சீரமைப்பு பணி தாமதம்

திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் நேற்று வரை முக்கிய சாலைகளான பனங்காடு, அண்ணாச்சி பாளையம் ஆகிய கிராமங்களுக்கு புஷ்பரதம் செல்லும் சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் உடனடியாக அந்த சாலைகளை முரம்பு மண் கொட்டி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காப்பு கட்டிக்கொண்டு பயபக்தியுடன் விரதம் இருந்து தோளில் சுமந்தவாறு புஷ்பரதத்தை தூக்கிச் செல்லும் போது சாலைகள் சீராக இருந்தால் தான் தேர் சாயாமல் சென்றடையும் ஆனால் ஊராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனத்தோடு செயல்படுவதாகவும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் சாலைகளை உடனடியாக சீரமைத்து சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறினர்.

நடவடிக்கை

இதுகுறித்து வல்லண்டராமம் ஊராட்சி மன்ற தலைவர் சைனலதா மணியிடம் கேட்டதற்கு ''பனங்காடு கிராமத்திற்குச் செல்லும் சாலை ஞாயிற்றுக்கிழமைக்குள் சீரமைக்கப்பட்டு விடும் என்றும் அண்ணாச்சி பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் திங்கட்கிழமைக்குள் தேர் செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு தேர் சிரமமின்றி எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


Next Story